370-வது பிரிவு ரத்தை எதிர்த்து சீமான் தலைமையில் டெல்லியில் போராட்டம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370-வது நீக்கப்பட்டதைக் கண்டித்து டெல்லியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று போராட்டம் நடைபெற்றது.
தமிழக அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு சீக்கியர் அமைப்புகளும் பங்கேற்றன. சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை பாஜக தலைமையிலான மத்திய அரசு நீக்கியது.
மேலும் இதனையடுத்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க பெரும்பாலான ஐம்மு காஷ்மீர் மாநில அரசியல் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை சுமூகமாக இருப்பதாக மத்திய அரசு தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் 370-வது பிரிவு நீக்கத்துக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்ற போராட்டம் இன்று நடைபெற்றது.
இதில் பல்வேறு சீக்கியர் அமைப்பு நிர்வாகிகளும் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிட்டனர். உலகம் முழுவதும் ஒடுக்கப்படுகிற அனைத்து தேசிய இன மக்களுக்காக நாங்கள் குரல் கொடுக்கிறோம்.
குரல்வளை அற்ற ஜம்மு காஷ்மீர் மக்களுக்காக தமிழர்களாகிய நாங்கள் குரல் கொடுக்கிறோம். ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். பொதுமக்களை திறந்தவெளி சிறைச்சாலையில் அடைத்துவிட்டு ஜனநாயகம் பற்றி மத்திய அரசு பேசுவது வேடிக்கையானது என்றும் அவர் பேசினார்.