தடுப்பூசி போட்டால் இதெல்லாம் வருமா? மத்திய அரசு விரிவான விளக்கம்!
கொரோனா தடுப்பூசி பற்றி பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே நிலவி வரும் நிலையில் இதை பொதுமக்கள் முதலில் அலட்சியம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது கொரோனாவை தொடர்ந்து பல்வேறு வியாதிகளும், வைரஸ்களும் பின் தொடர்வதால் தாமாக முன்வந்து தடுப்பு ஊசிகளை செலுத்தி கொள்கின்றனர்.
ஆனாலும் சில கருத்துக்கள் மக்களிடையே சலசலப்பை ஏற்படுகிறது. தடுப்பூசி பாதுகாப்பானதா? அல்லது பக்க விளைவுகள் ஏற்படுமா? என்ற வகையில் மக்களிடம் ஒரு பேச்சு நிலவி வருகிறது. இதன் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படும் என்ற வகையிலும் கேள்வி எழுந்துள்ளது. இதை தீர்க்க மத்திய அரசு விரிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் மலட்டுத் தன்மை ஏற்படுமா? என்ற கேள்வியையும் பலர் முன்வைத்துள்ளனர். மேலும் பாலூட்டும் தாய்மார்கள் கூட தடுப்பூசி போடலாமா? என்ற வகையிலும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து சுகாதார அமைச்சகம் தனது இணையதளத்தில் அடிக்கடி எழும் இந்த மாதிரி சம்பந்தமில்லாத கேள்விகளுக்கு பதில்கள் அளித்துள்ளது.
அதில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் எந்த ஒரு தடுப்பூசியும் பெண்களுக்கும் ஆண்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது என்றும், கருவுறுதலில் பாதிப்பு இல்லை என்றும் கூறுகிறது. மேலும் கொரோனா தடுப்பூசி காரணமாக மலட்டுத் தன்மை ஏற்படும் என்ற கட்டுக்கதையை யாரும் நம்ப வேண்டாம் என்றும், மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு தடுப்பூசி ஆண்கள் மற்றும் பெண்களின் மலட்டுத்தன்மை ஏற்பட வழிவகுக்கும் என்பதற்கு எவ்வித அறிவியல் சான்றுகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து சுகாதார அமைச்சகம் கூறுகையில், சமீபத்தில் கோவிட்19 நோய்த்தடுப்பு தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா அளித்த பேட்டியின்போது தடுப்பூசி குறித்த பயத்தையும் குற்றச்சாட்டுகளையும் நீக்கும் வகையில் பேசினார். அப்போது அவர் போலியோ தடுப்பூசி போடும்போது கூட இந்த மாதிரி தேவையில்லாத கேள்விகள் எழுந்து வந்தது. ஆனால் அதை நிரூபிக்கும் அளவுக்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரங்களும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
போலியோ தடுப்பூசி போடும்போது குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை வரலாம் என்ற ஒரு வதந்தியும் பரப்பப்பட்டது. எல்லா தடுப்பூசிகளும் ஆராய்ச்சி செய்யப்பட்டு அதன் பின்பே பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்படுத்தப்படுகின்றன. எனவே மக்கள் இதை குறித்து அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் தற்போது போடப்படும் எந்த தடுப்பூசியிலும் பக்கவிளைவுகள் எதுவும் இல்லை, என்றும் தெளிவுபடுத்தினார். இது குறித்து தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர்குழு கூறும் போது பாலூட்டும் அனைத்து தாய்மார்களும் தடுப்பூசிகளை தவறாமல் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதில் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும், தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானவை என்றும் கூறியுள்ளது.