வளர்ப்பு நாயை அடித்து கொடூரமாக கொன்ற சிறுவர்கள்! வைரலான ட்விட்டர் வீடியோ!
வாயில்லா ஜீவனான நாயை கட்டி இழுத்து வந்து அதை துடிக்க துடிக்க கட்டையால் அடித்துக் கொன்ற துயரமான சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் மூன்று சிறுவர்கள் என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேரும் 9 வயதுடைய லேபரர் வகையைச் சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயை கயிறு கட்டி இழுத்துச் சென்று தலைகீழாக படகில் கட்டி வைத்து, இந்த கொடுமைகளை செய்துள்ளனர். மேலும் இதை வீடியோ எடுத்து ட்விட்டர் இணைய தளத்தின் மூலம் அதை வெளியிட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில், திருவனந்தபுரம் அருகே அடிமலத்துரா கடற்கரையில், இந்த சம்பவம் நடந்தேறி உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த பலரும், #JusticeForBruno என்ற ஹேஸ்டேக் மூலம் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பலதரப்பட்ட குரல்கள் எழுந்துள்ளன.
சிறு வயதிலேயே இவ்வளவு வெறித்தனம் இருந்தால், இவர்கள் இத்தனை கொடூரங்கள் நிறைந்த சிறுவர்களாக இருக்கும் போது வளரும் பட்சத்தில் வளர்ந்த பின் சமூகத்தின் நிலை என்னவாக இருக்கும். பெரும்பாலும் சிறு பிள்ளைகள் இப்படி மூர்க்க குணத்துடன் இருக்கின்றனர். அப்படியே வளர்கின்றனர். இவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை வழங்க வேண்டுமெனவும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த அந்த நாயின் உரிமையாளர் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் விழிஞ்சம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இந்த வீடியோ குறித்து கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன. நாயை அடித்துக் கொன்ற 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் கேரளா ஹை கோர்ட் தாமாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த நாயின் நினைவாக ப்ரூனோ என மனுவின் பெயரை நீதிபதிகள் ஜெயசங்கர் நம்பியார் மற்றும் கோபிநாத் மாற்றி எழுதி விசாரணைக்கு எடுத்துள்ளனர். மனித கொடூர செயலுக்கு இரையான உதவியற்ற நிலையில் இருந்த அந்த வளர்ப்பு நாய்க்கு, அஞ்சலி செலுத்தும் வகையில் இது அமையும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விலங்குகளுக்கு எதிராக வருங்காலத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. மேலும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அந்த நாயின் உரிமையாளர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கை பற்றிய அறிக்கையை மாநில அரசு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று மத்திய மாநில அரசுகள் மற்றும் இந்திய விலங்குகள் நல வாரியம் ஆகியவற்றுக்கும் நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.