நீயா? நானா? என போட்டி போட்டுக்கொள்ளும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க!
நடந்து முடிந்த தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி அமைத்த பாரதிய ஜனதா கட்சி 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கண்டது. இருந்தாலும் கடந்த 25 வருடங்களில் பாரதிய ஜனதா கோட்டைக்குள் அடி எடுத்து வைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நடந்து முடிந்த சட்டசபை பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணம் பா.ஜனதாவுடனான கூட்டணியே என கூறியிருந்தார்.
இந்த கருத்து மிக பெரிய சர்ச்சையானது. இந்நிலையில் ,இதற்கு பா.ஜனதா வின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அ.தி.மு.க.வால் தான் பா.ஜனதா தோற்றது என்ற எண்ணம் எங்களுக்கும் இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்ச்சை குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியது என்னவென்றால் ஆலோசனை நடைபெறும் போது கூட்டணி குறித்து சி.வி. சண்முகம் அனைவரின் மத்தியில் தான் தனது கருத்தை தெரிவித்தார் . அது அவருடைய தனிப்பட்ட கருத்தே ஆகும். இது அதிமுகவின் ஒருங்கிணைந்த கருத்தல்ல இதற்காக கே .டி. ராகவன் பதில் அளித்திருக்க வேண்டியதில்லை. கூட்டணியை குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக வின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது என்னவென்றால் பாரத ஜனதா கட்சி மீதும் பிரதமர் மோடி மீதும் அ.தி.மு.க அளவு கடந்த நம்பிக்கையும், தீராத பற்றும் கொண்டுள்ளது. தேச நலனையும், தமிழ்நாட்டின் நலனையும் கருதி அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி தொடரும். இதில் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என அவர் பதிவிட்டுள்ளார்.