முதல் அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்-மு.க.ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு முடியும் வரை அவர் தமிழக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அந்த தொகுதிக்குட்பட்ட அம்பலம் என்ற கிராமத்தில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் வழக்கம் போல பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதனையடுத்து அவர் பருத்திப்பாடு எந்த கிராமத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் குடிநீர் வசதி, சாலை வசதி வேண்டும் என கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தான். தி.மு.க. ஆட்சி வந்தததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ஏராளமான கடன்கள் கொடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது கடன் கேட்டு மகளிர் வங்கிக்கு சென்றால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள் எந்த பகுதிக்கும் சென்று மக்களின் குறைகளை தீர்ப்பதில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என அறிஞர் அண்ணா கூறியது போல தி.மு.க. மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறது.
மக்களிடம் வாங்கிய கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் குரல் கொடுக்கிறோம். அப்படியும் இந்த அரசு மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டால் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவோம். அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 1½ ஆண்டுகளே உள்ளது. அதற்குள் அனைத்து துறைகளிலும் அவர்கள் அடிப்பதை அடிப்போம் என ஊழல் செய்து வருகிறார்கள். நெடுஞ்சாலைதுறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டே உத்தவிட்டுள்ளது.
இதற்கு முதல்-அமைச்சர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் நியாயமானவராக இருந்தால் இந்த பிரச்சனை தீரும் வரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள். எனவே காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் அவர் கூறினார்.
அப்போது வேட்பாளர் ரூபி மனோகரன், தி.மு.க. துணைபொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் வி.பி.துரை உள்ளிட்ட பலர் அவருடன் இருந்தனர்.