அதிமுகவில் ஐக்கியமாக தயாராகும் அமமுக முக்கிய நிர்வாகி
சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அமமுக கட்சியின் அதிருப்தியாளராக உள்ள புகழேந்தி திடீரென்று சந்தித்து பேசிய சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவிலிருந்து பிரிந்த டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆரம்பித்த அமமுக கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்தவர் தான் புகழேந்தி. கடந்த காலங்களில் கர்நாடக மாநில செய்தி தொடர்பாளராகவும் அவர் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் டி.டி.வி. தினகரனுக்கும் புகழேந்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையாடுத்து அமமுக பொது செயலாளர் டி.டி.வி. தினகரனை விமர்சித்து புகழேந்தி பேசிய வீடியோ வெளியானதால் அவர்களுக்குள் மேலும் மோதல் வெடித்தது.
இதனையடுத்து புகழேந்தி அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும் தனியாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் கூட்டமும் நடத்தினார். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று பகல் சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கி இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை புகழேந்தி திடீரென்று சந்தித்து பேசினார்.
இதனால் அமமுகவில் அதிருப்தியில் உள்ள புகழேந்தி அதிமுகவில் சேருவார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசி கொள்கிறார்கள்.
தினகரனுடன் இணைந்து இருக்கும் போது புகழேந்தி அதிமுக பற்றி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் கர்நாடக மாநில அதிமுக செயலாளராகவும் பதவி வகித்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் அவர் இன்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் அதிமுகவில் சேர விருப்பம் தெரிவிக்கும் சூழ்நிலையில் பழைய கருத்து வேறுபாடுகள் மறந்து அதிமுகவினர் இவரை ஏற்று கொள்வார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.