விவசாய நிலங்களை பாதிக்கும் தார் கலவை ஆலயங்கள்! மக்கள் மாபெரும் போராட்டம்!!
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே மருதம்பள்ளம் என்னும் கிராமத்தில், குடியிருப்பு பகுதிக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன் தனியார் தார்க் கலவை ஆலையொன்று அமைக்கப்பட்டிருந்தது. அதன் இயக்கத்தின்போது, ஆலையிலிருந்து வரும் புகை மற்றும் ஜல்லி துகள்களால் பொதுமக்களுக்கு உடல் குறித்த உபாதைகள் வருவதாகஊர் மக்கள் கூறியிருந்தார்கள்.
மேலும் ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுகளால் விவசாயம் பெருமளவு பாதிக்கபடுவதாகவும் கூறியிருந்தார்கள்.அது மட்டுமன்றி, அவ்வழியில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் இந்தக் கழிவுகள் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது என அவ் ஊர் மக்கள் குற்றம் சாட்டினார்கள்.இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை எனவும் அப்பகுதி பொதுமக்கள் பலரும் வேதனை தெரிவித்துவந்த நிலையில், தங்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் ஆத்திரம் அடைந்தார்கள். இன்றைய தினம் அவர்கள் அனைவரும் இணைந்து ஆலைக்கான தார் கலவையை கொண்டு வந்த லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
மக்கள் போராட்டத்தைக் கண்ட அந்த ஆலை நிர்வாகத்தினர் உடனடியாக பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்கள். அதன் முடிவில் குடியிருப்புவாசிகள், வாகன ஓட்டிகளை பாதிக்காதவாறு ஆலையின் செயல்பாடுகளை சீர்செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஆலை நிர்வாகத்தினர் தரப்பில் உறுதியளித்ததாக சொல்லப்படுகிறது. அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.