அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டத்தில் பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்வதாக ஸ்டாலின் குற்றச்சாட்டு
அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய சுகாதாரத் துறை அமைச்சரும், அதிகாரிகளும், இதில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஃபோக்டா’ அரசு மருத்துவர்களின் நலனுக்கான பல்வேறு கோரிக்கைகளை வைத்து கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறது. இதில் தகுதிக்கேற்ற ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு வடிவிலான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவு தவிர மற்ற பணிகளைப் புறக்கணித்து நடைபெறும் இந்த வேலைநிறுத்தம் இன்று 7-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தின் ஒரு கட்டமாக உண்ணாவிரதத்திலும் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவர்களுக்கு ஆதரவாக பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மாணவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் – அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் & நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கொடுங்கோன்மை!
மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும்! என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.