புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யும் பணி தொடங்கியதால் பரபரப்பு
நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் செய்து வரும் நிலையில், பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கனவே எச்சரித்திருந்தது
இந்த நிலையில் தற்போது புதிதாக 188 மருத்துவர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியதாகவும், நாளை அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அரசு தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரமாக எடுக்கவிருப்பதாகவும் இருப்பினும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப நாளை காலை வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,160 மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாகவும், பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு நன்றி என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடலூர், திருப்பூர், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் போராட்டம் செய்த மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மற்ற பகுதிகளில் உள்ள மருத்துவர்களும் தொடர்ந்து பணிக்கு திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆலோசனைப்படி பணிக்கு திரும்ப கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மேலும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினால் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் மருத்துவர்கள் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.