யார் வெற்றியை யார் கொண்டாடுவது? திமுகவிற்கு எதிராக கொந்தளிக்கும் வி.பி. துரைசாமி
மருத்துவ படிப்புகளில் OBC பிரிவில் உள்ள மாணவர்களுக்கு 27 சதவீதமும்,பொருளாதரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீதமும் மத்திய அரசு வழங்கி ஆணை பிறப்பித்தது.இதனையடுத்து இதற்கு திமுக தான் காரணம் என்றும்,திமுகவிற்கு கிடைத்த வெற்றி என்றும் கட்சியினர் மத்தியிலும் பல்வேறு ஊடகங்கள் சார்பாகவும் செய்திகள் வெளியாகின.அதே நேரத்தில் திமுக கோரியது 50 சதவீத இட ஒதுக்கீடு என்றும்,பாமக உள்ளிட்ட கட்சிகள் தான் 27 சதவீத இட ஒதுக்கீட்டை கேட்டு கோரிக்கை வைத்தன.இப்படியுள்ள சூழலில் இதற்கு திமுக எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த வி.பி. துரைசாமி இந்த விவகாரத்தில் திமுகவிற்கு எதிராக கருத்தை தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதுகுறித்து கூறியதாவது,
பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, என்றைக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது. மருத்துவ படிப்புகளில் OBC என்ற இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கும் தமிழக பாஜக நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவிக்கிறது.
இந்த அறிவிப்பு மூலமாக அனைவருக்கும் சமமான வாய்ப்பை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். இதற்கு, அவர் மாணவர்கள் மீது கொண்ட அக்கறைதான் காரணம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக ஒருபோதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தது இல்லை என்றும், அது தற்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுமட்டுமில்லாமல் இந்த அறிவிப்பானது தேர்தலுக்காக வெளியிடப்பட்டது அல்ல என்றும்,சமூக நீதி என்பது ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு குடும்பத்திற்கோ சொந்தமானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.குறிப்பாக சமூக நீதியை திமுக சொந்தம் கொண்டாடுவதை தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது ஆட்சி பொறுப்பேற்ற 100 நாட்களில் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் புதியதாக இவர் பொறுப்பேற்று தற்போதுவரை 85 நாட்களாகியும் இன்னும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. விரைவில் தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து தமிழர்கள் மீது இவர் கொண்ட அக்கறையை நிரூபிக்க வேண்டும் எனவும் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.