கொரோனா தாக்கியவர்களுக்கு 2 வாரங்களில் மாரடைப்பு ஏற்படும் அபாயம்!! உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்!!
கொரோனா வைரஸ் இது சீனாவில் கண்டறியப்பட்ட மனிதர்களிடம் ஏற்படும் தொற்று நோயாகும். சீனாவில் ஊகான் நகரத்தில் இது ஏற்பட்ட கொடிய தாக்கத்திற்கு பிறகு தான் இந்தப் பெயர் வைக்கப்பட்டது. மேலும் சீனாவிலிருந்து படிப்படியாக பரவி உலகம் முழுவதும் இந்த கொடிய தொற்று நோய் பரவி விட்டது. இதனால் உலகம் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் மற்றும் பல நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி வந்தனர். இதைத் தொடர்ந்து நோய் தொற்று அதிகமாக இருக்கும் நாடுகளில் முழு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
மேலும் இந்த வைரஸ் தொடங்கி இதுவரை இரண்டரை வருடங்கள் ஆன நிலையில் இரண்டாம் அலை, மூன்றாம் அலையென அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி இந்த தொற்று நம்மை விடாது துரத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பினால் உலகளவில் ஏற்பட்ட மனிதர்கள் இறப்பு விகிதம் மிகவும் அதிகம். இதனால் இந்த வைரசுக்கு ஒரு முடிவு கட்டும் வகையில் தடுப்பூசிகள் பல கண்டுபிடித்து வருகின்றனர். ஆனாலும் தடுப்பூசி உருவாக்கப்பட்டு புழக்கத்திலிருந்த ஆரம்பத்தில் தடுப்பூசியினால் பலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுவதாக வந்த தகவலின் பேரில் மக்கள் மேலும் பீதியில் இருந்தனர். தற்பொழுது அது போல் எந்த ஒரு பக்கவிளைவும் தடுப்பூசியினால் ஏற்படவில்லை அதனால் இந்தியாவில் மட்டுமன்றி உலக அளவிலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வாரத்தில் மாரடைப்பு, பக்கவாதம் என ஏதாவது ஒரு பக்கவிளைவுகளை சந்திக்கும் அபாயம் அதிகரித்து வருவதாக ஒரு ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். மேலும் இது பற்றிய ஆய்வு நடத்திய ஸ்வீடன் நாட்டின் உமேயா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒஸ்வால்டோ பொன்சேகா ரோடரிக்ஸ் கூறுகையில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய முதல் இரண்டு வாரங்களில் மாரடைப்பும் பக்க வாதமும் ஏற்படும் ஆபத்து தற்போது மூன்று மடங்கு அதிகரித்து இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம் என தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்ட மக்கள் மேலும் அதிர்ச்சியில் உள்ளனர்.