உலகில் பிளாஸ்டிக் பயன்பாடு வந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் வந்துள்ளது. தண்ணீர் முதல் காற்று வரை நமக்கு பிளாஸ்டிக் பொருட்களில் வைத்து எளிதாக எடுத்துச் செல்கிறோம். அதே நேரத்தில், பிளாஸ்டிக் மக்காமல் மண்ணில் புதைந்து விடுவதால் நிலத்தடி நீர் உட்புகாமல் மிகப்பெரிய தீங்கு ஏற்படுகிறது.
கால்வாய்கள், வாய்க்கால்கள், ஆறுகள், குளம், குட்டை, ஏரி, கடல் என எல்லா நீர்நிலைகளிலும் பிளாஸ்டிக் கலந்து வருவதால், அந்த இடங்களில் எல்லாம், தண்ணீர் மாசடைவதோடு, மின் உள்ளிட்ட வளங்களும் அழியும் ஆபத்தில் தள்ளப்படுகிறது.
இந்நிலையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை நாடு முழுவதும் தடை செய்வது என மத்திய சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது. அதாவது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஜூலை 1ம் தேதியில் இருந்து தடை செய்வதாக கூறியுள்ளது. அதன் பிறகு, இந்த பிளாஸ்டிக்கை தயாரிப்பது, ஏற்றுமதி செய்வது, கிடங்குகளில் வைத்திருப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது போன்றவை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க முடியும் என சுற்றுச்சூழல்துறை தெரிவித்துள்ளது. இது மிக முக்கியமான நடவடிக்கையாக நாம் பார்க்கலாம். ஆனால், கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
அதன் பின்னர், தண்ணீர் பாக்கெட்டுகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. கேரிபேக் விற்பனை தடை செய்யப்பட்டு, தற்போது மீண்டும் சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும், பிளாஸ்டிக் ஒழிப்பை கொண்டு வரும் மோடி அரசுக்கு தமிழக அரசும், அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியும் முன்னோடியாக இருந்துள்ளனர்.