நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியில் இரண்டு டோசும் போட்டிருந்தால் 97.5 சதவீதம் அளவிற்கு இறப்பு ஏற்படாது என்று ஐசிஎம்ஆர் இயக்குனர் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா, அளித்த பேட்டியில், ‘விஞ்ஞானிகளின் உதவியுடன் கொரோனா தடுப்பூசி ‘டிராக்கர்’ தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தளத்தின் மூலம் அறியப்பட்ட தகவலின்படி, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அவர்கள் இறப்புக்கான வாய்ப்பு ஏற்படாது.
இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டால் 96.06 சதவீதம் அளவிற்கு நோயாளிக்கு இறப்பு ஏற்படாது.தடுப்பூசியின் இரண்டு டோசும் போட்டுக் கொண்டவர்களுக்கு 97.5 சதவீதம் இறப்பு ஏற்படாது’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 65 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் தொடர்ந்து பாதுகாப்புடன் இருக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் வலியுறுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி, வாராந்திர தொற்று விகிதம் ஐந்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே மாவட்டத்தின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக கருத முடியும். இந்த விகிதம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இமாச்சல பிரதேசம், கேரளா, வடகிழக்கு மாநில மாவட்டங்களில் உள்ளன.
கேரளாவில் தற்போது 2.40 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் 51,419 நோயாளிகளும், கர்நாடகாவில் 17,085 பேரும், தமிழகத்தில் 16,180 பேரும், ஆந்திராவில் 14,510 பேரும் உள்ளனர். தேசிய அளவில் கிட்டதிட்ட 30 மாநிலங்களில் தலா 10,000க்கும் குறைவான மக்களே சிகிச்சையில் உள்ளனர்.