கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் வைத்த முக்கிய வேண்டுகோள்!

0
123

தமிழ்நாடு தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு இரு சமுதாய வளைகாப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் நேற்றைய தினம் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு விழாவை நடத்தி வைத்து சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கி இருக்கிறார்.
இந்த விழாவில் திமுகவைச் சார்ந்த கீதாஜீவன் மற்றும் திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் பங்கேற்றார்கள். இந்த விழாவில் அமைச்சர் சுப்பிரமணியன் உரையாற்றி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது, தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்ட எல்லாவிதமான அறிவிப்புகளையும் செயல்படுத்தும் வேலைகள் தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகளிர் மேம்பாட்டு திட்டங்களில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் என்று கூறியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கி தற்சமயம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டு தற்சமயம் அது செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது.

அதேபோல எல்லா அரசு மருத்துவமனைகளிலும் பாலூட்டும் அறைகள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை குறிப்பிட்ட இந்த சமயத்தில் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது தவறான ஒரு முன்னுதாரணம் ஆகிவிடும். இந்த முடிவை பெண்கள் நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என கூறியிருக்கிறார்.

அறுவை சிகிச்சையின் மூலமாக குழந்தை பெற்றுக் கொள்ளும் சமயத்தில் 10 முதல் 15 நாட்களுக்கு முன்பாகவே இவர்கள் குறிப்பிட்ட சமயத்தில் குறிப்பிட்ட நாளில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என முயற்சி மேற்கொள்கிறார்கள். குழந்தையை முழுமையாக வளர விட்டு சுகப்பிரசவத்தில் தான் குழந்தையை பெற்றெடுக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் குழந்தை ஆரோக்கியமாக காணப்படும் என கூறியிருக்கிறார் சுப்ரமணியன்.

பரிசோதனை செய்ய வருகைதரும் கர்ப்பிணி பெண்களுக்கு இது தொடர்பாக சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது என தன்னுடைய உரையில் தெரிவித்திருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்.

Previous articleபாலிடெக்னிக் மற்றும் பி.எஸ்சி முடித்த மாணவர்கள் கவனத்திற்கு! இன்று முதல் இது தொடக்கம்!
Next articleவிவசாயிகளின் முகத்தில் புன்னகை பூக்க! தமிழக அரசால் தொடங்கப்பட்டு இருக்கும் புதிய திட்டம்!