நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: சபரிமலைக்கு செல்ல குவியும் பெண்கள்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு நேற்று வெளியானபோது இந்த மனுவை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதாக மட்டும் அறிவிக்கப்பட்டது. மேலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு தடை இன்றும் அறிவிக்கப்பட்டது
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 2 மாத காலம் தொடர்ந்து நடைபெறும் மகரஜோதி மண்டல பூஜை, நாளை மறுநாள் தொடங்குகிறது. சபரிமலை சீசன் தற்போது தொடங்கவுள்ளதை அடுத்து சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்ய ஏராளமான பெண்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின் பெண்களும் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு வரை 46 பெண்கள் முன்பதிவு செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்றும் கூறப்படுகிறது. முன்பதிவு செய்த பெண்களின் முகவரி உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய தரிசனத்துக்கு கேரள அரசு ஏற்பாடு செய்து வருகிறது
அதே சமயம் வழக்கம்போல் ஒருசில அமைப்புகள் பெண்களை சபரிமலை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்றும் பெண்கள் நுழைய முயற்சித்தால் தடுப்போம் என்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றன. எனவே சபரிமலை ஐயப்பன் விவகாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது