தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையை உடைத்து, கனிம வளங்களை சட்டவிரோதமாக கேரளாவுக்கு கடத்துவதாக கடந்த சில நாட்களாகவே புகார் எழுந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதனை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பிரபல யூடியூபரான சாட்டை துரைமுருகன் தலைவர்கள் குறித்தும், தமிழக அரசை அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து, தக்கலை உதவி ஆய்வாளர் ராஜசேகரன் அளித்த புகாரின் பேரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று காலை நாங்குநேரியில் கைது செய்துள்ளனர். மேலும், அவரை 25 ஆம் தேதி வரை நாங்குநேரி கிளை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக திருச்சி கே.கே நகரில் கடை நடத்தி வந்த வினோத் என்பவர் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைப் பற்றி இழிவாக பேசி சமூகவலைதளங்களில் விமர்சித்தவை, நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் நேரடியாக சென்று மிரட்டிய புகாரில் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.