வெள்ளிக்கிழமை முதல் திறக்கக் கோரி மனு! இன்று நீதிமன்றத்தில் அவசர வழக்கு!
கோவையை சேர்ந்த ஆர். பொன்னுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் பட்டதை அடுத்து, தற்போது தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. எனவே மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இதெல்லாம் நடைமுறைக்கு வந்தாலும், இன்றும் கோவில்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை வாரத்தில் மூன்று நாட்கள் வழிபாட்டுத்தலங்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகையாகும்.
வருகிற 15ஆம் தேதியான வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகை வருகிறது. அன்று வெள்ளிகிழமை என்பதால், தமிழக அரசின் உத்தரவின்படி கோவில்கள் திறக்காது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அரசு அனுமதிக்கிறது. ஆனால் அம்மனை வழிபடும் பெண்களின் மனதை புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடிக்கிறது என்றும், அதன் காரணமாக கோவில்களை திறக்க வேண்டும். எனவே விஜயதசமியன்று கோவில்கள் திறக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது ஒரு அவசர வழக்காக கருதி இன்று விசாரணைக்கு வர உள்ளது.