கொரோனா பெருந்தொற்று காரணத்தினால் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் திறக்கப்படாமலேயே இருந்தன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடந்தன.
இந்நிலையில் 9,10,11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்கு பல எதிர்ப்புகளும் வந்தன. பள்ளிகள் திறக்கப்பட்ட சிறிது நாட்களிலே பள்ளி மாணவர்களுக்கு கொரோனாத்தொற்று அதிகமாகவும் கண்டறியப்பட்டது.
இப்படி பல சவால்களுக்கு இடையே 9,10,11,12 வகுப்புகள் நடைப்பெற்று கொண்டுதான் இருக்கின்றன.
தற்பொழுது 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுமா? மாணவர்களால் அந்த தேர்வுகள் இலகுவாக எதிர்கொள்ளப்படுமா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
தற்போது கல்வியமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார். அதாவது அரசுப்பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தும் சூழ்நிலை ஏற்படாது என கூறியுள்ளார்.
மேலும் ஆண்டு இறுதி தேர்வானது மார்ச் மாதம் இறுதிக்குள் நடைபெறும் எனவும் அதற்காக மாணவர்கள் எந்த அளவிற்கு ஆயத்தமாக உள்ளார்கள் என்பது குறித்து டிசம்பர் மாதம் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.