கனமழை காரணமாக பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு! மக்களின் அச்ச உணர்வு!
கேரளாவில் தென்கிழக்கு அரபிக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அதன் காரணமாக அங்கு கடந்த இரண்டு நாட்களாக, கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கே கோட்டயம், மலப்புரம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது நடக்கும் அசம்பாவிதங்களை பார்த்தால் கடந்த 2018 – 2019 ம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை நினைவுபடுத்துவதாக கேரள மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் பலத்த மழையின் எதிரொலியாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இடுக்கி பகுதிகளிலெல்லாம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கூட்டுக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து போயின. அதில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். அந்த தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்க தொடங்கினார்கள். மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மொத்தம் 22 பேரை காணவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அங்கு கடற்படை மற்றும் ராணுவத்தினர் உட்பட பலரும் மக்களை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து அங்கு மழை பொழிந்து வருவதன் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வருவாய் துறை அதிகாரிகள் அங்கேயே முகாமிட்டு உள்ளனர். மேலும் அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழைக்கு கோட்டயம் மற்றும் இடுக்கியில் இரண்டு பெண்களும் ஒரு குழந்தையும் கூட இறந்துள்ளனர்.
இதுபோல தொடுபுழா அருகே உள்ள அரக்குளம் ஆற்று பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கார் ஒன்றும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அதிலும் இரண்டு பெண்கள் பலியாகியுள்ளனர். அந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் உடலை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இதுவரை அங்கு 18 பேர் பலியாகி உள்ளனர் என்றும் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் மீட்புப் படையினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.
ராணுவ ஹெலிகாப்டர்கள் மோசமான வானிலை காரணமாக அந்தப் பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை அங்கு மழை சற்று குறைந்ததன் காரணமாக மீண்டும் மீட்பு குழுவினர் அங்கு சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள். ஆனால் இன்னும் இரண்டு 48 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்டும் விடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.