நடமாடும் பல் மருத்துவ சேவை துவக்கி வைத்த-சுகாதாரத்துறை அமைச்சர்.!!

0
144

மக்களை தேடி பல் மருத்துவ சேவைகளை அளிக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அவர் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது அவருடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு, மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் மற்றும் மருத்துவமனை முதல்வர் விமலா ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் நடமாடும் பல்மருத்துவ வாகனத்தில் இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு செவிலியர்கள் இருப்பார்கள் என்றார். அவர்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை தேடி மருத்துவத்தை போல மக்களை தேடி பல் மருத்துவம் என்கிற வகையில் மருத்துவ சேவையை வழங்க உள்ளனர்.

வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அனுமதி பெற்று அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பல் மருத்துவ சேவை வழங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த 2006-2011 திமுக ஆட்சியில் சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பல் மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கும் பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவையான பல் மருத்துவ உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் அந்த திட்டம் நடைமுறையில் இல்லை. தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்த திட்டம் மீண்டும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தால் சென்னை மாநகர மக்களும், பள்ளி மாணவர்களும் பயன்பெற உள்ளனர் இத்திட்டம் எந்தவகையில் பயன்படுகிறது என்று அறிந்த பிறகு கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Previous article2 நாட்களாக மாற்றமின்றி விற்கும் பெட்ரோல், டீசல்.!! இன்றைய விலை நிலவரம்.!!
Next articleதமிழகத்தில் குழந்தை பெறாததற்கு திமுக தான் காரணம்-ஹெச்.ராஜா குற்றச்சாட்டு.!!