ஆஸ்கர் விருதுக்கான இந்திய பரிந்துரை தேர்வுக்கு யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மண்டேலா. இந்த திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தார்.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, அதன்பிறகு, நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் மண்டேலா திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கான இந்திய பரிந்துரை பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆண்டுதோறும் இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்கு ஒரு திரைப்படம் அனுப்பப்படும். இதற்காக தேசிய அளவில் பல மொழி திரைப்படங்கள் போட்டிபோடும். அந்த வகையில், இந்த ஆண்டு இந்தியா சார்பாக வித்யாபாலன் நடித்த ஷெர்னி, விக்கி கவுல் நடித்த சர்தார் உதம், மலையாளத்தில் மார்ட்டின் பிரகத் இயக்கிய நாயட்டு, உள்ளிட்ட 14 திரைப்படங்கள் போட்டியிடுகின்றன. இதில் தமிழில் மண்டேலா திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இயக்குனர் ஷாஜி என்.கருண் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு இப்படங்களை பார்த்து அதிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்து இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரையாக அனுப்பும். கடந்த வருடம் இந்தியா சார்பாக போட்டியிட்ட கல்லிபாய் திரைப்படம் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை.