லக்னோவில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்று டி20 தொடரைக் கைப்பற்றியது.
முன்னதாக களமிறங்கி பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை எடுத்திருந்தது. அடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை மட்டுமே எடுத்து 29 ரன்களில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொரை 2-1 என்ற கணக்கில் நடப்பு டி20 சாம்பியனான மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆப்கானிஸ்தான் வென்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரும்,அந்த அணியின் விக்கெட் கீப்பருமான குர்பாஸ் ஆட்ட களத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சை விளாசி எடுத்து விட்டார். மரண அடி அடித்த குர்பாஸ் தனக்கு கிடைத்த 52 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட மொத்தமாக 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அதே போல அந்த அணியின் பந்துவீச்சில் ரஷித் கான் வழக்கம் போல் கட்டுக்கோப்பாக வீசினார். 4 ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். அடுத்து வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல்ஹக் 24 ரன்களை மட்டுமே எதிரணியினருக்கு கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். முஜிபுர்ரஹ்மான் 3 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து அவரும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ நகரில் இந்த போட்டி நடந்தது. ஏற்கனவே இரு போட்டிகளில் இந்த இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்ததால், இறுதியாக நடைபெற்ற இந்த 3-வது போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இதில் 29 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்று இந்த டி20 தொடரைக் கைப்பற்றியது.
முன்னதாக நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்த ஆப்கானிஸ்தான் அணி இந்த டி20 தொடரை வென்று தக்க பதிலடி கொடுத்துள்ளது.