பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி மறக்கமுடியாத திரைப்படங்களில் ஒன்று மறுமலர்ச்சி. இந்தப் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். இருவருக்கும் டூயட் பாடலாக, “நன்றி சொல்ல உனக்கு” என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.
இதில் வில்லனாக ரஞ்சித் நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்குனர் பாரதி இயக்கியிருப்பார். 1998 ஆம் ஆண்டில் வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருப்பார். மேலும் தங்கர்பச்சான் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய திரைப்படமாகும்.
இத்தகைய நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் பாரதி தற்போது மறுமலர்ச்சி படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கவுள்ளார். இதற்கு கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாரிப்பு நிகழ்கிறது. கொரோனா வைரஸ் பரவ காரணமாக திரைப்படத்தின் ஆரம்ப பணிகள் தாமதமாகின்றன.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ராஜ்கிரன் கதிர்வேல் படையாட்சியார் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இதில் இரண்டாவது கதாநாயகனாக பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். இதற்காக பல்வேறு கட்டங்களாக அந்த நடிகரிடம் பாரதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்கும் எஸ் ஏ ராஜ்குமார் தான் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார். முன்னதாக படை, படை படையாச்சி டா என்ற பாடலை படக்குழு உருவாக்கி வெளியிட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.