நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்!
இப்போதுள்ள கணவன்மார்கள் மனைவி சாதாரணமாக யாரிடமாவது நட்பாக பேசினால் கூட கொலை செய்யும் அளவிற்கு கொடூரமாக இருக்கிறார்கள். ஆனால் நமது ஈரோட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை நண்பனுக்கு காதலியாக நடிக்க வைத்து, அதன் மூலமும் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி உள்ளார். மிகவும் நல்ல மனிதர் தானே.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. 35 வயதான இவர் வாடகைக்கு கார்கள் விடும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் தீவிரமாக பெண் தேடி வருகின்றனர். ஆனால் எதுவும் அவருக்கு இதுவரை அமையவில்லை. இந்நிலையில் பாலாஜியின் நண்பரான ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா.
38 வயதான இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். ராஜாவின் மனைவி நித்யா என்ற 34 வயது பெண். இவர்களுக்கு திருமணம் கடந்த 2018 ம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்திற்கு ராஜா தனது நண்பரான பாலாஜியையும் அழைத்திருந்தார். எனவே பாலாஜியும் திருமணத்திற்கு சென்று வந்து இருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாலாஜியிடம் சென்று ராஜா எனது திருமணத்தில் சத்யா என்று ஒரு பெண் வந்து இருந்ததாகவும், அந்த பெண்ணுக்கு உன்னை மிகவும் பிடித்திருப்பதாகவும், உன்னிடம் பேச விரும்புவதாகவும், விருப்பம் தெரிவித்ததாக கூறியுள்ளார். அதனால் பாலாஜி சற்று தடுமாறியதால், அவருக்கும் இளம்பெண்ணிடம் பேச ஆசை ஏற்பட்டுள்ளது.
எனவே சத்யா என்ற பெண்ணின் கைபேசிக்கு பாலாஜி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். முதலில் பேச ஆரம்பித்தார்கள். அதன் பின் நன்றாக பழகி பிறகு காதல் மலர்ந்ததாக கூறுகின்றனர். இந்நிலையில் சத்யா புனேவில் மருத்துவ படிப்பு படித்து கொண்டு இருப்பதாகவும், தனது படிப்பு செலவுக்கு பணம் வேண்டும் என்றும் பாலாஜியிடம் கூறியுள்ளார்.
இருவருக்கும் இடையே மலர்ந்த காதலின் காரணமாக சத்யா கேட்கும்போதெல்லாம் பாலாஜி அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி வந்துள்ளார். பல மாதங்களாக ஆயிரக்கணக்கில் பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் நேரில் சந்திக்காமலேயே கைபேசியில் மட்டும் பேசிக் கொண்டே இருப்பதன் காரணமாக பாலாஜிக்கு ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அதன் பிறகு அவர் சத்யா குறித்து விவரங்களை விசாரிக்கத் தொடங்கினார். அப்போது தான் அவருக்கு சத்யா என்ற ஒரு இளம்பெண் கிடையாது என்றும், இத்தனை நாட்கள் நாம் ஏமாற்றப்பட்டோம் என்றும், அவர் தனது நண்பனின் மனைவி நித்யாதானென்பதும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவர் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரை பதிவு செய்த போலீசார் ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாலாஜிக்கு பெண் தேடுவதை அறிந்த ராஜாவும், அவரது மனைவியான நித்யாவும் பணம் பறிக்கும் நோக்கத்தில் திட்டமிட்டு பாலாஜியை ஏமாற்றி சுமார் 12 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ராஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து, மேலும் அவர்களை கைது செய்துள்ளனர்.