20 ஓவர் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்தை வீழ்த்துமா இந்தியா?

0
74
Did India will sustain T20 WOrld cup series 2021?

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடக்க இருக்கும் போட்டியில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன.

உலகக் கோப்பை வரலாற்றில், இதுவரையிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி வென்றதே இல்லை. மேலும், கடந்த சில காலங்களாக, ஐசிசி நடத்தியப் போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி வரலாற்றை மாற்றும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதில்லை என்ற நிலையில், இந்த முறை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்திய அணியை தோற்கடித்தது, தங்களின் தோல்வி வரலாற்றை மாற்றி எழுதியது. இதேபோல் இந்திய அணியும் நியூசிலாந்து அணியை வீழ்த்தும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நியூசிலாந்து அணியும் தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் மோதி தோல்வி கண்டுள்ளது. இதனால் இந்திய அணியும் நியூசிலாந்து அணியும் மோதும் ஆட்டம் மிக முக்கியமானதாக இருக்கும்.

2007-ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்ற போதிலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியே கண்டது. அதிலிருந்து இதுவரையில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் வென்றதே இல்லை.

அதிலும் மிக முக்கியமாக, 2019 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியது. மேலும் சமீபத்தில், நடைபெற்ற, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

இத்தகைய தோல்வி வரலாற்றுடன் தான் தன்னுடைய அடுத்தப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. தங்களுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வி கண்ட இந்த இரு அணிகளும், துபாயில் நடைபெற உள்ள இந்த 20 ஓவர் போட்டியில் வெற்றி பெறும் கட்டாயத்திற்கு தள்ளப் பட்டுள்ளன.