தொடர் கனமழையால் வெள்ளக் காடாகும் சென்னை! வெளியூரிலிருந்து சென்னை வர வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தல்

0
169
Chennai Rain News 2021
Chennai Rain News 2021

தொடர் கனமழையால் வெள்ளக் காடாகும் சென்னை! வெளியூரிலிருந்து சென்னை வர வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தல்

வரும் நவம்பர் 9 ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால் தமிழகத்தில் அடுத்து வரவுள்ள 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் தான் நேற்று முதல் சென்னையில் தொடர் மழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்த மழை இடி, மின்னலுடன் தொடர்ந்து பெய்து வருகிறது.

குறிப்பாக போரூர், மதுரவாயல், பூந்தமல்லி, மதுரவாயல், குன்றத்தூர், வளசரவாக்கம், ஆவடி, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம் மற்றும் கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது. இரவு ஆரம்பித்த கனமழை அதிகாலை வரை தொடர்ந்ததால் சாலைகளில் மழைநீர் நிரம்பி வெள்ளக்காடாக மாறியுள்ளது. சாலைகளில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மழை நீரில் ஊர்ந்து செல்கின்றன.

மேலும் சென்னை மட்டுமின்றி அதன் சுற்று வட்டார புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, எண்ணூர், தாம்பரம், வண்டலூர் மற்றும் திருமழிசை உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னைக்கு அருகிலுள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறந்துவிடபட்டுள்ளது. அதே போல, புழல் ஏரியிலிருந்து காலை 11 மணி முதல் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது, இதனால் அருகிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இந்த தொடர் மழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் மற்றும் வெளியூரில் இருந்து சென்னையை நோக்கி வருபவர்கள் என அனைவரும் 2 நாட்கள் கழித்து பயணம் மேற்கொள்ளவும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

Previous articleஅதிமுகவை சட்ட ரீதியாக மீட்டெடுக்க போகும் சசிகலா?
Next articleகோரிக்கை வைத்த சென்னைவாசிகள்! அரசு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட முதலமைச்சர்!