சென்னையில் சிறப்பு மழைக்கால முகாமை ஆரம்பித்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தற்போது சென்னையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பொழிந்து வருவதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அனைத்து மாவட்டங்களிலும் மழையின் அளவு அதிகரித்து, கனத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையே வெள்ளக்காடாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
அனைத்து குளம், குட்டை என எல்லவற்றையும் ஆக்கிரமித்து வீடு கட்டி வைத்துள்ளதால், தண்ணீர் வடிய வசதி இல்லாத காரணத்தினாலும் அனைத்து வீடுகளைச் சுற்றிலும், பல பகுதிகளில் தண்ணீர் ஆக தேங்கி நிற்கின்றது. அதன் காரணமாக சென்னையில் பொது மக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க வேண்டி இன்று சிறப்பு மருத்துவ முகாமிற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி மழைக்கால சிறப்பு இலவச மருத்துவ முகாமை சென்னை ஆழ்வார்பேட்டையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நடைபெறுகிறது.
மேலும் பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக வேண்டி காய்ச்சல், வாந்தி சளி, இருமல் உள்ளிட்ட பல நோய்கள் பரவாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னையின் பல தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதன் காரணமாக பல்வேறு சாலைகள், பல்வேறு சுரங்கப்பாதைகள், தெருமுனைகள் என திரும்பிய திசை எங்கும் மழை நீர் ஆக்கிரமித்து உள்ளது.
திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீராக காட்சி அளித்தாலும் இன்னொரு புறம் மழைநீரை வெளியேற்றுவதிலும் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பணியில் மாநகராட்சி ஊழியர்கள், குடிநீர் வாரிய ஊழியர்கள், தீயணைப்பு துறை ஊழியர்கள் என அனைத்து துறை அதிகாரிகளும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தேங்கி உள்ள தண்ணீரை ராட்சஸ மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டு உள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக அங்கேயே தண்ணீர் தேங்கி நிற்பது போல் உள்ளது. மழை நின்று விட்டால் முழுவீச்சில் அந்த தண்ணீரை வெளியேற்றி விடலாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.