அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கும் வரும் 7ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று ஆரம்பமானது.
இந்த தேர்தலை நடத்தும் ஆணையர்களாக நியமனம் செய்ய பட்ட பொன்னையன்,
தேர்தல் பிரிவு செயலர் பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்டோர் முன்னிலையில், வேட்புமனு வினியோகம் நடந்தது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பி. எஸ் ஆதரவாளர்கள் அவருடைய பெயரிலும் இபிஎஸ் ஆதரவாளர்கள் அவருடைய பெயரிலும், விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றதாக சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ் இபிஎஸ் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது இந்த பதவிகளுக்கு இவர்கள் இருவரை தவிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன் வரமாட்டார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், சென்னை ஓட்டேரியை சேர்ந்த அதிமுக தொண்டர் ஓமப்பொடி பிரசாத் சிங் என்பவர் நான் ஒருங்கிணைப்பாளர் பதவியில் போட்டியிட விருப்பமனு விண்ணப்ப படிவம் வாங்க வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மதியம் 12.30 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த அவரிடம் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு மட்டும் தனியாக வேட்புமனுதாக்கல் செய்ய முடியாது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு இருவர் சேர்ந்து வந்து மனுத்தாக்கல் செய்ய வேண்டும் அதோடு வேட்புமனுவை கட்சியில் 5 வருடங்களுக்கு மேல் உறுப்பினராக இருப்பவர்கள் முன்மொழிய வேண்டும்,எனக்கூறி கட்சி நிர்வாகிகள் விண்ணப்பப்படிவம் வழங்க மறுத்துவிட்டதாக தெரிகிறது.