மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் சட்டசபை! 5ஆம் தேதி கூடுகிறது அடுத்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம்!

0
153

நோய்த்தொற்றுக்கு முன்பாக தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்றது சென்ற வருடம் மார்ச்சு மாதம் 24 ஆம் தேதியுடன் சட்டசபை கூட்டம் முடித்து வைக்கப்பட்டது. நோய் தொற்று அதிகமாக இருந்ததன் காரணமாக, சமூக இடைவெளியை கருத்தில் கொண்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் மாற்றப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பின்னரும் கலைவாணர் அரங்கத்தில் தான் இந்த கூட்டம் நடைபெற்று வந்தது.

கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி வரையில் அங்கே கூட்டம் நடந்தது, தற்சமயம் நோய்த்தொற்று பரவல் கணிசமாக குறைந்து இருக்கின்ற சூழ்நிலையில், சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு மறுபடியும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி மாதம் 5ம் தேதி சட்டசபை கூட இருக்கிறது. இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது, ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில் தமிழகத்தில் நாள்தோறும் நோய்தொற்று பரவலுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரமாக இருந்தது. அந்த மோசமான நிலை தற்சமயம் படிப்படியாக குறைக்கப்பட்டு இருக்கிறது, நோய் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து சமூக இடைவெளியுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்று வந்தது தற்சமயம் நோய்த்தொற்று பாதிப்பு 600க்கு உட்பட்டுதான் இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்.

ஆகவே தலைமைச் செயலகத்தில் ஏற்கனவே நடைபெற்றுவந்த இடத்தில் சட்டசபையை நடத்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி அடுத்த வருடத்திற்கான சட்டசபை ஜனவரி மாதம் 5ஆம் தேதி கூட இருக்கிறது. இந்த கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் அன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகும். சட்டசபை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் ஆரம்பிப்பதுதான் மரபு என்று தெரிவித்திருக்கிறார். அதோடு அதன்பிறகு பொது பட்ஜெட், மானியக் கோரிக்கைகள் உள்ளிட்ட கூட்டத்தொடர்களும் அடுத்தடுத்து நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.

மறைந்த பேராசிரியர் அன்பழகனின் உருவப்படத்தை சட்டசபையில் திறப்பது தொடர்பாக உரிய காலத்தில் பதில் வழங்கப்படும். தமிழக சுகாதாரத்துறை கடுமையான முயற்சி எடுத்து மிகப்பெரிய அளவில் பிரச்சாரம் செய்து 83% நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஆகவே சமூக இடைவெளி தேவையில்லை என்று கருதப்பட்டு சென்னை கோட்டையில் சட்டசபை கூட இருக்கிறது சட்டசபைக்கு வரும் எல்லோரும் முக கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என கூறியிருக்கிறார்.

சட்டசபை கூட்டத்தொடரின் போது தொடு திரைகள் கண்டிப்பாக அனைத்து உறுப்பினர்கள் மேடையிலும் வைக்கப்பட்டிருக்கும், காகிதம் இல்லாத பட்ஜெட்டாக சட்டசபையை ஆரம்பித்தோம். இங்கும் அனைத்து சட்டசபை பணிகளும் காகிதம் இல்லாமல் தொடுதிரை உதவியுடன் நடத்தப்படும். சட்டசபை உறுப்பினர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கிறார்.

சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக அனைத்து விவரங்களும் சட்டசபை செயலகத்தின் கவனத்தில் இருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன, தலைமைச்செயலகத்தில் இருக்கின்ற சட்டசபையில் பார்வையாளர்களை அனுமதிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு எடுக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் இருந்து அதிகாரி ஒருவர் இங்கு நியமிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினால் சட்டசபை பணிகளை கண்காணிப்பதற்காக அவர் நியமிக்கப்பட்டு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மத்திய அரசும், மாநில அரசும், இணைந்து செயல்படுகின்றன. இணைந்து பல திட்டங்களை இரண்டு அரசுகளும் செயல்படுத்தி வருகின்றன. எல்லா திட்டங்களும் மாநில அரசின் மூலமாக தான் செயல்படுத்தப்படுகின்றன. ஆகவே கண்காணிப்பதற்கான அவசியம் இங்கு எழவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்று இந்தியா டுடே பத்திரிகை தெரிவித்திருக்கிறது இதன் காரணமாக, இங்கு எப்படி நடைபெறுகிறது என்பதை பார்வையிட்டு மற்ற மாநிலங்களுக்கும் நாடாளுமன்றத்திற்கும் கொண்டு செல்லலாம். அதற்காக அந்த அதிகாரி இங்கு வந்திருக்கலாம், அனைத்துமே நல்ல படியாகத்தான் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானம் காலதாமதம் இன்றி நிறைவேற வேண்டும் என்ற கருத்து சிம்லாவில் நடைபெற்ற சபாநாயகர்கள் மாநாட்டில் வெளிப்படுத்தப்பட்டது. நான் உரையாற்றிய அந்த கருத்துக்களை கவர்னரிடம் நேரில் நான் சொல்லப்போவதில்லை. சொல்லவும் கூடாது சபாநாயகர்கள் இடையே நடைபெற்ற மாநாடு என்பதன் காரணமாக, அனைத்து மாநில சபாநாயகர்கள் வந்திருந்ததால் அதில் அந்த கருத்தை நான் சொல்ல முடிந்தது. மற்றபடி கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தில் இருக்கும் ஆளுநர் மற்றும் ஜனாதிபதியிடம் தெரிவிப்பது சபாநாயகரின் வேலை அல்ல. அந்தப் பணி சபாநாயகர் உடையது இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த பேட்டியின் போது சட்டசபை செயலாளர் சீனிவாசன் உடன் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

Previous articleபொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்த தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி குறிப்பு!
Next articleஇந்த நாட்களில் குமரி கடல் பகுதியில் ஜாக்கிரதையாக இருங்கள்! மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!