லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! முன்னாள் அமைச்சரின் வீடுகளில் சிக்கியது என்ன?

0
141

அதிமுக ஆட்சிக்காலத்தில் மின் துறை அமைச்சராக பதவி வகித்தவர் தங்கமணி இவர் தற்போது குமாரபாளையம் தொகுதியில் சட்டசபை உறுப்பினராக இருந்து வருகின்றார். அவர் அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

இவர் மின்துறை அமைச்சராக பதவி வகித்தபோது சென்ற 2016 ஆம் வருடம் மே மாதம் 23ஆம் தேதி முதல் சென்ற வருடம் மே மாதம் 6ம் தேதி வரையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்தார்என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை இவர் மீது நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மனைவி சாந்தி, மகன் தரணிதரன், உள்ளிட்டோரும் சிக்கி இருக்கிறார்கள். சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் மனைவி சாராவுடன் தரணிதரன் வசித்து வருகின்றார். தங்கமணியின் மகள் லதா ஸ்ரீ கணவர் தினேஷ்குமார் உடன் பள்ளிபாளையம் அருகே இருக்கின்ற கலியனூரில் வசித்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்று காலை 6 .30 மணி அளவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருடைய உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். என்று சொல்லப்படுகிறது. கரூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, சென்னை, ஈரோடு, உட்பட 9 நாடுகள் மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தலா இரண்டு பகுதிகளில் உட்பட ஒட்டுமொத்தமாக 69 இடங்களில் நடைபெற்றதாக தெரிகிறது.

அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருக்கின்ற சட்டசபை உறுப்பினர் விடுதி, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், மதுரவாயல், எழும்பூர், பட்டினப்பாக்கம், அரும்பாக்கம், கோயம்பேடு, பனையூர், உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற உறவினர்களின் இல்லம், அலுவலகங்கள், என்று 14 இடங்களில் சோதனை நடைபெற்றது. அதில் பட்டினப்பாக்கம் காவல் நிலையம் பின்புறம் சோதனை நடந்த இடம் அவருடைய சம்பந்தி சிவசுப்பிரமணியன் வீடு என்று சொல்லப்படுகிறது.

இந்த சோதனை நடந்தபோது கோவிந்தம் பாளையத்தில் இருக்கின்ற வீட்டில் தங்கமணி இருந்திருக்கிறார் இங்கு மட்டும் 20க்கும் அதிகமான லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தார்கள் வீட்டில் இருக்கின்ற பூஜை அறை சமையல் அறை முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் அறை படுக்கை அறை என்று அனைத்து இடங்களிலும் பணம் நகை முக்கிய ஆவணங்கள் ஏதும் இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது புத்தக அலமாரி பீரோ கட்டில் மெத்தை சமையல் பாத்திரங்கள் என்று எதையுமே சோதனையின்போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விட்டு வைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல சேலம் ராஜபுரம் பகுதியில் இருக்கின்ற தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு, சேலம் ஜங்ஷன் பகுதியில் இருக்கின்ற அஸ்வா பார்க் நட்சத்திர விடுதி மற்றும் குரங்கு சாவடியில் இருக்கின்ற ஓட்டல் உரிமையாளர் குழந்தைவேலு வீடு, உறவினர் இல்லம், நாமக்கல் மாவட்டம் புதுப்பாளையம், காட்டூரில் இருக்கின்ற அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் உள்ளிட்டோரின் வீடு, என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.

அதேபோல ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கின்ற தங்கமணிக்கு சொந்தமான கட்டுமான நிறுவன அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள். ஒரே சமயத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, என்று மூன்று மாநிலங்களில் 69 பகுதிகளில் சோதனை நடைபெற்றதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு உண்டானது.

இந்த சோதனை நடந்த போது சென்னை சட்டசபை உறுப்பினர்கள் விடுதி உட்பட ஒரு சில பகுதிகளில் அதிமுகவினர் கூடி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப தொடங்கினார்கள். காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள், இதற்கிடையே சோதனையில் சிக்கிய பணம், நகை, ஆவணங்கள் உள்ளிட்டவை தொடர்பாக நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, குமாரபாளையம் சட்டசபைத் தொகுதி சட்டசபை உறுப்பினர் தங்கமணி இதற்கு முன்பு தமிழக அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்த சமயத்தில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி முதல் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தன்னுடைய பெயரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சத்து 7219 ரூபாய் மதிப்பிலான சொத்து சேர்த்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தங்கமணி, அவருடைய மகன் பரணிதரன் மற்றும் அவருடைய மனைவி சாந்தி உள்ளிட்டோர் மீது நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

மேற்படி சோதனையில் 2 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 458 ரூபாய் பணம், தங்க நகைகள் ஒரு கிலோ 30 கிராம் சுமார் 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், அதில் கூறப்பட்டு இருக்கிறது .அதில் கணக்கில் வராத பணம் 2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் மற்றும் சான்று பொருட்களான கைபேசிகள், பல வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்ட் டிஸ்க் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவை விரட்டி அடித்த பாமகவினர்! அதிர்ச்சியில் திரையுலகம்
Next articleதமிழகத்தில் கால் தடம் பதித்தது புதிய வகை நோய் தோற்று! ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது!