வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

0
84
Onion Imports from egypt-News4 Tamil Latest Online Business News in Tamil
Onion Imports from egypt-News4 Tamil Latest Online Business News in Tamil

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

தொடர்ந்து உயர்ந்து வரும் சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதற்காக எகிப்தில் இருந்து 6090 டன்கள் அளவிற்கு வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் தான்முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இருக்கும் லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. இதற்கு அடுத்து கர்நாடக மாநிலத்திலும் அதிக அளவில் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த மாதம் மகாராஷ்டிராவில் துரதிஷ்டவசமாக பருவம் தவறி மழை பெய்தது. குறிப்பாக அந்த பகுதியில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் அமையும். வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கன மழை பெய்தது.

இவ்வாறு பருவம் தவறி கடந்த மாதம் பெய்த இந்த கனமழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இதனால் போதிய வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் மார்கெட்டில் தொடர்ந்து உயர்ந்தது.

இந்நிலையில் நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை தொட்டது. இதனையடுத்து விலையை செயற்கையாக உயர்த்தும் வகையில் வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் உத்தரவிட்டன.

பின்னர் வெங்காயத்தின் விலை சற்று குறைந்து விற்பனையாகி வந்த நிலையில் தற்போது மீண்டும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் தற்போது வெங்காயத்தின் கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

இதனால் வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. இதற்காக ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நாடுகளில் இருந்து கடல் வழியாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் அளவுக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டன. குறிப்பாக தனியார் நிறுவனங்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதல்கட்டமாக 1000 டன்கள் வெங்காயத்தை இறக்குமதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்த வெங்காயம் அடுத்த வாரத்தில் இந்தியா வந்தடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பொதுத்துறை நிறுவனமான தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை நிலையம் மூலமாக எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலமாக எகிப்தில் இருந்து 6090 டன்கள் வெங்காயம் மும்பை துறைமுகத்துக்கு விரைவில் வந்து சேரும் என நுகர்வோர் நலத்துறை செயலாளர் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.

author avatar
Parthipan K