இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது!

Photo of author

By Parthipan K

இவர்களுக்கு ரயிலில் பயணிப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது!

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று நாட்டில் வேகமாக பரவி வரும் இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு  மாநிலங்கள் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

அதன்படி ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என்றும் பயணிகள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

மேலும் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் போது இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. மற்றும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் முக கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.

இந்த வகை கட்டுப்பாடுகள் 10ஆம் தேதி முதல் இந்த மாதம் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயின் இந்த புதிய கட்டுப்பாடுகள் 10 ஆம் தேதியான நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் அமலில் வந்ததை தொடர்ந்து  சென்னை புறநகர் ரயிலில் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று இல்லாத 2,177 பேருக்கு நேற்று ரயில்களில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.