தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் 19.76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2020 மார்ச் மாதத்தில் நாட்டில் கொவிட்-19 பரவல் தொடங்கியதை அடுத்து, இந்திய அரசின் ‘பிரதமரின் ஏழைகள் நல தொகுப்பு’ அறிவிப்புக்கு இணங்க, ‘பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின்’ கீழ் நாட்டில் உள்ள சுமார் 80 கோடி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்ட பயனாளிகளுக்கு ‘கூடுதல்’ மற்றும் ‘இலவச’ உணவு தானியங்கள் (அரிசி/கோதுமை) விநியோகம் செய்யும் பணியை உணவு மற்றும் பொது விநியோகத் துறை தொடங்கியது.
ஒரு நபருக்கு மாதத்திற்கு 5 கிலோ என்ற அளவில் கூடுதல் உணவு தானியங்கள் விநியோகிக்கப்படுகின்றன. பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 19.76 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் கொவிட் பாதிப்புகளை அடுத்து, உணவு தானியங்களை கொண்டு செல்லுதல் மற்றும் விநியோகம் செய்தலை உணவு மற்றும் பொது விநியோகத் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
2020-2021 ல் பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கட்டம் I&II-ன் கீழ் உணவு தானிய விநியோகம் செய்வதில் மிசோரம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகியவை சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக மதிப்பிடப்பட்டுள்ளன.
2021-2022 ல் சத்தீஸ்கர், திரிபுரா, மிசோரம், டெல்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் விநியோகம் செய்வதில் சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களாக மதிப்பிடப்பட்டுள்ளன.
ஆந்திரப் பிரதேசம், பீகார், தாத்ரா நாகர் ஹவேலி டாமன் & டையு, தில்லி, ஹரியானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியவை மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத்தின் கீழ் 98%-100% ஆதார் அடிப்படையிலான உணவு தானிய விநியோகத்தை செய்துள்ளன.
கோவா, மத்தியப் பிரதேசம், கேரளா மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் 90% – 98% ஆதார் சார்ந்த விநியோகமும்
,ஒடிசா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அந்தமான் நிகோபார், ஜார்கண்ட், மிசோரம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் 70% – 90% ஆதார் அடிப்படையிலான உணவு தானிய விநியோகமும் நடைபெற்றுள்ளன.