ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் இடம்பிடித்த தமிழ்படம்! எது தெரியுமா?
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் ஜெய்பீம். உண்மைக் கதையை மையமாக கொண்டு வெளிவந்தது இந்தப் படம். ஒருசில தரப்பில் இருந்து இந்த படத்திற்கு தேவையின்றி எதிர்ப்பு வந்த போதும், பல்வேறு தரப்பில் இருந்தும் மற்றும் திரையுலக பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றதுடன், மக்களால் கொண்டாடப்பட்ட இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
மேலும் இணையத்தில் பல்வேறு மொழிப் படங்களின் விமர்சனங்கள் இடம்பெறும் தளம் ஐஎம்டிபி. இது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இணையதளம் ஆகும். இந்த இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்ற படமாக ‘தி ஷஷாங் ரிடம்ஷன்’ இடம்பெற்றிருந்தது. இந்த நிலையில், அந்த படத்தை பின்னுக்கு தள்ளி முதன் முறையாக ஐஎம்டிபி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது தமிழ் படமான ‘ஜெய்பீம்’ திரைப்படம்.
அதனை தொடர்ந்து ஆஸ்கர் விருதுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய் பீம்’ இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் ஆஸ்கரின் யூடியூப் சேனலில் ‘சீன் அட் தி அகாடமி’ என்ற தலைப்பில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தின் சில காட்சிகளை ஆஸ்கர் பகிர்ந்திருந்தது. இதன்மூலம் ஆஸ்கர் அகாடமியின் யூடியூப் பக்கத்தில் ‘சீன் அட் தி அகாடமி’ பிரிவில் இடம்பெற்ற முதல் தமிழ் திரைப்படம் என்ற சிறப்பை பெற்றது ஜெய்பீம்.
உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர். இந்த ஆஸ்கர் விருதினை அடைவது அவ்வளவு எளிதல்ல. ஓராண்டில் உலகளவில் வெளியாகும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சில திரைப்படங்களில் சிறந்த படமாக விளங்கும் ஒரு திரைப்படத்திற்கே இந்த ஆஸ்கர் விருது வழங்கப்படும்.
அந்த வகையில் ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம்பெற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 திரைப்படங்களில் ஒன்றாக சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது.