ஐபிஎல்-ல் இவர்கள் விளையாடுவதில் புதிய சிக்கல்! என்ன செய்யப்போகின்றன அணிகள்!!
ஐபிஎல் 2022 தொடருக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இந்த மெகா ஏலம் பெங்களூருவில் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கு இன்னும் சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து நேற்று ஐபிஎல் தொடரில் ஏலம் விடப்படவுள்ள மொத்த வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அதில் மொத்தமாக 1,214 வீரர்களை பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் இருந்து 590 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 370 இந்திய வீரர்களும், 220 அயல்நாட்டு வீரர்களும் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களை ஏலம் எடுப்பதில் அனைத்து அணிகளும் குழம்பியுள்ளன. ஏனென்றால் ஐபிஎல் தொடர் இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளது. மார்ச் இறுதியில் தொடங்கி மே இறுதி வாரம் வரை நடைபெற உள்ளது.
இந்த சமயத்தில் (மார்ச் 29 முதல் ஏப்ரல் 5 வரை) ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாட ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்மித் என முன்னணி வீரர்கள் அனைவரும் ஐபிஎல்-ல் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதேபோல் இங்கிலாந்து அணியும், வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் டெஸ்ட் தொடர்களை விளையாட திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. எனவே இதன் காரணமாக ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ் போன்றோர் ஐபிஎல்-ல் இருந்து விலகிவிட்டனர்.
இந்த இரு நாடுகளில் இருந்தும் தான் ஐபிஎல் தொடரின் அனைத்து அணிகளிலும் பெரும்பாலும் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், பல கோடிகளில் ஏலம் எடுத்து அவர்கள் விளையாடவில்லை என்றால் என்ன செய்வது என அனைத்து அணிகளும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளன.