வேட்பாளர்களின் அதிகபட்ச தேர்தல் செலவு தொகை இவ்வளவுதான்!
தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதால் தற்போதைய காலகட்டத்தில், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தேர்தலை நடத்த தடை விதிக்க முடியாது. தேர்தல் ஆணையமே அதை முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த வார புதன்கிழமை மாலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார், நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தார்.
அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த மாதம் 19ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தேர்தல் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலில் அதிகபட்சமாக செலவு செய்ய வேண்டிய தொகையின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், சென்னை மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்யலாம். மற்ற மாநகராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக ரூ.85 ஆயிரம் வரை செலவு செய்யலாம்.
இதேபோல், மற்ற பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், அதிகபட்சமாக தேர்தலில் செலவு செய்ய வேண்டிய தொகையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் செலவுக் கணக்குகளை வேட்பாளர்கள் அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் குறிப்பிட்ட காலத்துக்குள் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.