கல்லூரியில் ஆன்லைன் தேர்வுகள் ரத்து? போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்!
கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக பெருமளவு பாதிப்பை தந்து வருகிறது. அரசாங்கம் பல கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தொற்றானது முடிவின்றி தொடர்ந்து பரவிக் கொண்டே தான் உள்ளது. தடுப்பூசி நடைமுறைக்கு வந்தால் தொற்று பாதிப்பு குறையும் என்று மக்கள் எண்ணினர். ஆனால் தற்சமயம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று உறுதியாகும் நிலை வந்துவிட்டது. இவ்வாறு இருக்கையில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களின் நலன்கருதி விடுப்பு அளித்தனர். அவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்கள் கற்பிக்கப்பட்டது.
அந்த வகையில் நமது தமிழகத்தில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.தற்பொழுது தொற்று பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று நேரடி வகுப்புகளை கற்பித்து வருகின்றனர். அதேபோல புதுச்சேரியில் தொற்று பாதிப்பு அதிகரித்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டது. தற்சமயம் தொற்று பாதிப்பு அம்மாநிலத்தில் குறைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கபட்டது.
இவ்வாறு கல்லூரிகள் திறந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 16ம் தேதி நேரடி தேர்வு நடத்தப்படும் என்று கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. கல்லூரிகள் திறந்து 16 நாட்களிலேயே தேர்வுகள் நடத்துவதா? என்று மாணவர்கள் நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி முன்பு போராட்டம் நடத்த தொடங்கினர். எங்களுக்கு ஆன்லைன் முறையிலேயே தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் மாணவர்கள் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவர்கள் போராட்டத்தை கலைக்க அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் மற்றும் அப்பகுதி காவல்துறையினர் மாணவர்களிடையே சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கல்வி அமைச்சர் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் நேரடி தேர்வு எழுதுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என போராட்டத்தில் இறங்கிய மாணவர்களிடம் கூறியுள்ளனர். இவர்கள் கூறியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. அங்கு ஏற்பட்ட போராட்டத்தால் அந்த அரசு கலைக்கல்லூரி சற்று பரபரப்பாக காணப்பட்டது.