நீட் விலக்கு தொடர்பான மசோதா! தமிழக அரசின் திட்டம் இதுதான்!!
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு நீட் விலக்கு தொடர்பான மசோதாவின் மீது ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதை தொடர்ந்து, அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பல மாதங்களாகியும் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் அந்த மசோதாவை கிடப்பில் போட்டிருந்தார் ஆளுநர்.
இந்த நிலையில், ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு தொடர்பான மசோதாவை நிராகரித்து, சபாநாயகருக்கு திருப்பி அனுப்பி இருந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநரின் இந்த முடிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்த முடிவை ஏற்க மறுத்த தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது.
அந்த கூட்டத்தில் மீண்டும் சட்டசபையில் நீட் விலக்கு தொடர்பான மசோதாவை கொண்டு வர முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, சமீபத்தில் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி மீண்டும் நீட் விலக்கு தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா மீது தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒரு சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினால், அதே மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும் என சட்டம் சொல்கிறது. இருப்பினும் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் எதுவும் சட்டத்தில் சொல்லப்படாததால் அதை வைத்தே மசோதாவை கிடப்பில் போட்டு விடுகிறார்கள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக டெல்லியில் ஒருசில முயற்சிகளை தமிழக அரசு சார்பில் எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்காக சட்ட போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்றால் நீண்ட சட்ட போராட்டத்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.