பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

0
89

பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அதிரடி!

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் பரவி இந்தியாவிலும் நுழைந்து வேகமாக பரவி வந்தது. இந்த நிலையில், நாட்டில் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்க தொடங்கியது.

குறிப்பாக டெல்லியில் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக அந்த சமயத்தில் முதல் மாநிலமாக இரவு நேர ஊரடங்கை டெல்லி அரசு அமல்படுத்தியது. அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் நாடு முழுவதிலும் தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து, அம்மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதற்கிடையே பொதுத்தேர்வு நடத்த தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த பொதுநல மனு தொடர்பாக உரிய தேர்வு அமைப்புகளை நாட வேண்டும். இந்த மனுவை விசாரித்தால் குழப்பங்கள் உருவாகும். மாணவர்கள் மத்தியில் பொய்யான நம்பிக்கை உருவாகி விடும் என்று தெரிவித்தனர். மேலும் இந்த பொதுநல மனு தொடர்பாக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேர்வுகள் உரிய விதிமுறைகளின்படி நடைபெறாவிட்டால் அதை எதிர்த்து மனு தாக்கல் செய்யலாம். ஆனால், இதுபோன்ற பொதுநல மனு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்த நீதிபதிகள் இது போன்ற பொதுநல மனுவை எதிர்காலத்தில் தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.