உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

Photo of author

By Parthipan K

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதன் காரணமாக இன்று  தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 950 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இன்று தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு நாற்பது முதல் ஐம்பது கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே அறுபது கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.