கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக தமிழக அரசு வகுத்துள்ள புதிய திட்டம்!
சீனாவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது தீவிர பரவலால் பெரும்பாலான உலக நாடுகளை நிலைகுலையச் செய்தது. எனவே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பலக்கட்ட ஆய்வுக்கு பிறகு கொரோனா தொற்றை எதிர்த்து போராடக்கூடிய கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்த தகுதி உள்ள அனைத்து நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் இந்தியாவிலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் அதிகமாக யாரும் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வந்தது. இதனால் கொரோனாவின் பாதிப்பை உணர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்திகொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகத்திலும் இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தடுப்பூசியை அனைவருக்கும் விரைந்து செலுத்துவதற்காக பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே தமிழகத்தில் தடுப்பூசி போடுவதில் மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது. எனவே இந்த தடுப்பூசி திட்டத்தின் கீழ் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில்,
தமிழகத்தில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தற்போது தான் தொடங்கப்பட்டது. அவர்களுக்கு விரைந்து தடுப்பூசி போடும் பணி நடைபெறும். அதேநேரம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது என அவர்கள் தெரிவித்தனர்.