திருப்பூரில் 6 வயது சிறுமி மீது காவல் வாகனம் மோதி விபத்து! சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!
திருப்பூர் மாவட்டத்தில் போலிஸ் வாகனம் 6 வயது சிறுமி மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் விஜயா புரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு 6 வயதில் திவ்யதர்ஷினி என்ற மகள் உள்ளார். மகள் திவ்யதர்ஷினி விஜயா புரம் அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். தனது மகள் திவ்யதர்ஷினியை அழைத்துக் கொண்டு ராஜேஸ்வரி அவர்கள் தனது இருசக்கர வாகனத்தில் நல்லிக்கவுண்டன் நகர் அருகே நேற்று அதாவது ஜூலை 5ம் தேதி புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தார்.
அந்த சமயம் அந்த வழியாக வந்த காவல்துறையின் வாகனம் ராஜேஸ்வரி அவர்களின் இருசக்கர வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்த சிறுமி திவ்யதர்ஷினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் ராஜேஸ்வரி அவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் ஒன்று கூடி காவல் வாகனத்தை இயக்கிய ஊர்காவல் படையை சேர்ந்த சின்னக்கண்ணன் என்பவரை பிடித்து வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டம் நடத்துவதை அறிந்த நல்லூர் காவல்துறையினர் ஓட்டுநர் சின்னக்கண்ணனை விசாரணை செய்ய காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் “காவல்துறை வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுநர் சின்னக்கண்ணன் மது போதையில் இருந்துள்ளார். ஓட்டுநர் சின்னக்கண்ணன் வேகமாக வாகனத்தை இயக்கியதால் தான் இந்த விபத்து ஏற்பட்டது. எனவே சின்னக்கண்ணனை கைது செய்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.
தாய் கண் முன்னே குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து மாநகர காவல் துணை ஆணையர் வனிதா மற்றும் பிற உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.