ரூ.2 ஆயிரம் கடனுக்காக 2½ வயது ஆண் குழந்தையை கடத்தி வந்த தம்பதி!

0
285
#image_title

ரூ.2 ஆயிரம் கடனுக்காக சக தொழிலாளியின், 2½ வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையில் இருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர்.

திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 வயது ஆண் குழந்தையுடன் ஒரு தம்பதி சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்தனர். இதனை ரெயில் நிலையம் முன்பு உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து சந்தேகப்பட்டு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து குழந்தையுடன் இருந்த தம்பதியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய நடைமேடையில் தங்கி தூய்மைப்பணியை மேற்கொள்ளும் வேலு (வயது 32), அவரது மனைவி வள்ளி (28) என்பதும், அவர்கள் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து 2½ வயது ஆண் குழந்தையை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

கடத்திவரப்பட்ட குழந்தை, ஜோலார்பேட்டை ரெயில் நிலைய நடைமேடை பகுதியில் தங்கி தூய்மைப்பணி மேற்கொள்ளும் டென்னி (32) என்பவரது குழந்தை ஆகும். டென்னி, வேலுவிடம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

அந்த கடனை திருப்பிக்கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் கடந்த 10-ந் தேதி இரவு ஜோலார்பேட்டையில் தூங்கிக்கொண்டிருந்த டென்னியின் குழந்தையை தூக்கிக்கொண்டு வேலுவும், வள்ளியும் ரெயில் மூலமாக திருப்பூருக்கு வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் திருப்பூர் வடக்கு போலீசார் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு டென்னி தனது குழந்தையை காணவில்லை என்று ஏற்கனவே போலீசில் புகார் கூறியிருந்தார்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் டென்னியுடன் திருப்பூர் வந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ரூ.2 ஆயிரம் கடனுக்காக குழந்தையை கடத்தி வந்த வேலு, வள்ளி ஆகிய 2 பேரையும் ஜோலார்பேட்டைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Previous articleகிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் விபரீதம்!
Next articleஅம்பேத்கர் பிறந்தநாள் விழா!! 900 பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் வழங்கிய விஜய் ரசிகர்கள்!!