சேலம் கோரிமேட்டை சேர்ந்த இடைத்தரகரான கனிமொழி என்பவர் பல நிதி நிறுவனங்களில் இருந்து பலருக்கு கடன் பெற்றுக் கொடுக்கும் வேலையை பார்த்து வந்துள்ளார். நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, வழக்கறிஞர் கண்ணன் பிரபு என்பவரிடம் இவர் தனக்காக 30000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
இவரிடம் தனக்காக கடன் பெற்றது மட்டுமின்றி மேலும் 15 பேருக்கு 6 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெற்று கொடுத்துள்ளார். இதில் சில பெண்களும் இவரிடம் கடன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கடன் பெற்ற பெண்களை தன்னிடம் கூட்டி வருமாறு இடைத்தரகரான கனிமொழி அவர்களுக்கு கண்ணன் பிரபு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.
வழக்கறிஞர் கண்ணன் பிரபுவின் மிரட்டலுக்கு பயந்த இடைத்தரகர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று கூறிய நிலையில், நீ அழகாபுரம் காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்கப் போகிறாய். அந்த காவல் நிலையம் என்னுடைய லிமிட்டில்தான் உள்ளது அதனால் எனக்கு எந்தவித பயமும் இல்லை என்று மிரட்டியுள்ளார்.
மேலும் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த இடைத்தரகர் கனிமொழி அவர்கள் கூறுகையில், வழக்கறிஞர் கூறுவதை நான் மறுக்கும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஒரு நாளைக்கு 82 முறை போன் செய்து உன் மீது போலீசில் நான் தவறாக கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்றும், நீ வீட்டில் பெண்களை வைத்து விபச்சார தொழில் செய்கிறாய் என்று உன் வீட்டிற்கு போலீஸ் ரெய்டு வர வைப்பேன் என்றும் மிரட்டி வந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு மட்டுமின்றி முதலமைச்சர் உட்பட பலருக்கு பெட்டிஷன் அளித்துள்ளதாகவும் செய்தியாளர்களிடம் பேசும் பொழுது தெரிவித்திருக்கிறார்.