மங்களூரில் 70 வயது மூதாட்டியின் மன உறுதியால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

Photo of author

By Savitha

மங்களூரில் 70 வயது மூதாட்டியின் மன உறுதியால் பெரும் ரயில் விபத்து தவிர்ப்பு

கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பச்சநாடியை அடுத்த மந்தாரா ரயில்வே தண்டவாளத்தில் மழையின் காரணமாக ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதை அப்பகுதியை சேர்ந்த சந்திராவதி என்ற 70 வயது மூதாட்டி பார்த்துள்ளார்.

அது மும்பை மத்தியகங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வரும் நேரம் என்பதாலும், ரயில்வே நிர்வாகத்தில் தொலைபேசி எண்கள் தன்னிடம் இல்லை என்பதால் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்க முடியாது என்பதை உணர்ந்த சந்திராவதி சமயோஜிதமாக யோசித்து சிவப்பு நிற கொடியை காண்பித்தால் மட்டுமே ரெயிலை நிறுத்த முடியும் என முடிவெடுத்தார்.

மேலும் உடனடியாக அருகில் இருந்த தனது வீட்டிற்கு சென்ற சந்திராவதி, ஒரு சிவப்புநிற ஆடையை எடுத்து வந்து, ரயில் தண்டவாளத்தில் இன்று ரயில் வரும்போது அந்த சிவப்பு துணியை அசைத்துள்ளார். இதை ரயிலில் இருந்த லோகோ பைலட்டும் பார்த்துவிட்டு ஏதோ ஆபத்து இருப்பதை உணர்ந்து ரயிலை உடனடியாக நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மரம் முறிந்து விழுந்தது குறித்து ரயில் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு
வந்த ரயில்வே ஊழியர்கள் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுசென்றது. மூதாட்டியின் இந்த சமூகப்பணியை பார்த்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் பயணிகள் அவரை பாராட்டியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. இதனால் சமூக வலைத்தளத்திலும் மூதாட்டிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.