ஈரோடு அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜான். இவர், தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 19) ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இவர்களது காரை மற்றொரு காரில் வந்தவர்கள் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ரவுடி ஜான் சென்ற கார், நசியனூர் பகுதி அருகே வந்தபோது, அவரை காரை பின் தொடர்ந்து வந்தவர்கள் வழிமறித்துள்ளனர்.
பின்னர், காரில் இருந்து இறங்கி வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், காருக்குள் வைத்து ரவுடி ஜானை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், நிலைகுலைந்து போன ஜான், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த ரவுடியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து ரவுடியை வெட்டி சாய்த்த வழக்கில் சதீஷ், சரவணன், பூபாலன் ஆகியோரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். அவர்கள் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உட்பட மொத்தமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.