கோடை காலம் தொடங்கியது என்றாலே தர்பூசணி பழத்தின் விற்பனையானது அதிக அளவில் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு ஊசிகள் மூலமாக தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டதை தொடர்ந்து நியாயமாக தங்களுடைய பழங்களை பாதுகாத்து பயிரிட்டு வளர்த்த விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்திருக்கின்றனர்.
அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருபுவனம் அருகே உள்ள கிளாதரி, மகாலட்சுமிபுரம் அரசலூர் இலுப்பை குடி போன்ற பகுதிகளில் 600 ஏக்கர்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி சாகுபடி ஆனது பறிக்கப்படாமல் கொடியிலேயே விட்டு அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோடைகால விற்பனைக்காக ஏக்கருக்கு 30,000 வரை செலவு செய்து விவசாயிகள் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர்.
எப்பொழுதுமே தர்பூசணி பழத்திற்கு விதைகள் வாங்கும் பொழுதே கேரள வியாபாரிகள் தங்களுக்கு பழத்தை விற்பனை செய்ய வேண்டும் என சொல்லி அட்வான்ஸ் தொகை கொடுப்பதாகவும் இது கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். முதலில் 50 ஏக்கர் பயிரிடப்பட்ட தர்பூசணி சாகுபடியானது தற்பொழுது 600 ஏக்கரில் பயிரிடப்பட்டு வருவதாகவும் சொட்டுநீர் பாசனம் மூலமாக தர்பூசணி சாகுபடி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாட்களில் பலன் தரக்கூடிய தர்பூசணி விளைச்சல் தேக்கருக்கு 20 வரை லாபம் அளிக்கக் கூடியதாகவும் சுழற்சி முறையில் இதற்கான அறுவடை நடைபெறும் என்றும் அங்குள்ள விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலையில் தான் இந்த ஆண்டு தர்பூசணியில் ஊசி மூலம் இரசாயனம் மருந்து செலுத்துவதாக பரவிய செய்தியால் தங்களுடைய பழங்களை வாங்க கேரளாவிலிருந்து எந்த வியாபாரியும் வரவில்லை என்றும் அதனால் தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக கோடை காலம் என்றாலே தமிழகத்தில் விளைவிக்கக் கூடிய தர்பூசணி பழங்கள் தான் கேரள சுற்றுலா தளங்கள் அனைத்திலும் விற்பனை செய்யப்படும் என்றும் ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவில் கேரள வியாபாரிகள் வரவில்லை என வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.