புதிய வகை டெலிகிராம் மோசடி!! தமிழக டிஜிபி எச்சரிக்கை!!
செல்போனில் இருக்கும் தொழில்நுட்பம் நமக்கு எந்த அளவிற்கு உபயோகமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு நமக்கு ஆபத்தையும் தருகிறது. செல்போன் மூலம் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிலும் உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது எனவும், பரிசு பொருள் வந்து இருக்கிறது அதற்கு பணம் கட்ட வேண்டும் எனவும் கூறி பணம் பறிக்கும் கும்பல்களும் அதிகமாகவே உள்ளது.
தற்போது டெலிகிராம் மூலம் மோசடி செய்வதாக தமிழக டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை பற்றி அவர் கூறுகையில் இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் உங்களது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு லிங்க் அனுப்புவார்கள் அதை நீங்க கிளிக் செய்யும் போது அவர்களுடைய டெலிகிராம் குருப்பில் உங்களை இணைத்துக் கொள்வார்கள். அந்த குருப்பில் இருப்பவர்கள் நீங்கள் இந்த குருப்பில் 1 லட்சம் முதலீடு செய்தால் உங்களுக்கு மாதம் வட்டி மற்றும் 10 ஆயிரம் வரும்.
உங்களுடைய முதலீடு அப்படியே இருக்கும் எனவும், நானும் வேலை மற்றும் வருமானம் இல்லாமல் இருந்தேன். தற்கொலை செய்யகூட முயற்சி செய்தேன் அப்போதுதான் இதை பற்றி சொன்னார்கள் நானும் தெரிந்தவர்களிடம் இருந்து கடன் வாங்கி இதில் 1 லட்சம் முதலீடு செய்தேன். மாதாமாதம் 10 ஆயிரம் வட்டி என்னுடைய வங்கி கணக்கில் வந்து விடுகிறது என கூறி உங்களை மூளை சலவை செய்வார்கள்.
மேலும் நான் 5 லட்சம் முதலீடு செய்துள்ளேன் அது 2 வருடத்தில் 25 லட்சம் ஆகிவிட்டது என்றும் கூறுவார்கள். அவர்களின் பேச்சை நம்பி நீங்களும் பணத்தை அவர்கள் குறிப்பிடும் வங்கியில் டெபாசிட் செய்தால் பணம் வந்துவிட்டது என கூறி உங்களுக்கு அத்தாட்சி அனுப்புவார்கள். உங்களுக்கு மாதம் எவ்வளவு தொகை வரும் எனவும் கூறிவிடுவார்கள். நீங்கள் முதேலீடு செய்த தொகைக்கு முதலில் சரியாக பணம் அனுப்பி வைப்பார்கள்.
பிறகு மீண்டும் முதலீடு செய்யும்படி கூறுவார்கள். நீங்களும் பணம் வருகிறது என்ற நம்பிக்கையில் மீண்டும் முதலீடு செய்வீர்கள் உங்களுடைய பணம் 25 லட்சம் ஆகியுள்ளது எனும் போது நீங்கள் உங்கள் பணத்தை கேட்டால் 50 லட்சம் ஆகும்போது தான் கொடுப்போம் என கூறுவார்கள். வேறு வழிகளில் பணத்தை கட்டி 50 லட்சம் ஆகிவிட்டது என சொல்வார்கள் அப்போது நீங்கள் பணத்தை கேட்டால் உங்களுக்கு அந்த பணத்தை கொடுக்காமல் அந்த டெலிகிராம் குருப்பில் இருந்து நீக்கி விடுவார்கள்.
பிறகு உங்களால் அந்த பணத்தை வாங்கவே முடியாது. இது ஒரு புது வகையான மோசடி தமிழ்நாட்டில் யாரும் இது போன்ற மோசடிக்கு ஆளாகி விடக்கூடாது என்றுதான் தமிழக காவல்துறை உங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கிறது. மிகவும் கவனமாக இருங்கள் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.