மசாஜ் -பார்லர் உரிமையாளரை மிரட்டி புழல் சிறை சென்ற அரசியல் கட்சித் தலைவர்!!
சென்னை பள்ளிக்கரணை அருகே பார்லர் – மசாஜ் சென்டர் நடத்தி வருபவரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி அரசியல் கட்சித் தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை பள்ளிக்கரணை வட்டாரத்தை சேர்ந்தவர் கார்த்திக். என்கின்ற பாஸ்கரன். இவர் தாம்பரம் சேலையூர் பகுதியில் சொந்தமாக மசாஜ் மற்றும் பார்லர் நடத்தி வருகிறார். இவரிடம் தாம்பரம் பகுதியை சேர்ந்த இந்தியன் மக்கள் மன்ற தலைவர் வராகி என்பவர் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மசாஜ்- பார்லர் தொழிலில் தன்னையும் பார்ட்னராக சேர்க்கும்படி கார்த்திக் அவர்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
தன்னை பார்ட்னராக சேர்த்துக் கொண்டால், காவல்துறையிடம் இருந்து வரும் தொந்தரவியிலிருந்து தப்பிக்கலாம் என்றும் போலீசிடமிருந்து தான் காப்பாற்றுவதாகவும் கார்த்திக்கிடம் சொல்லி உள்ளார். ஆனால் கார்த்திக் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால், ஆத்திரம் அடைந்த வராகி கார்த்திக் மீது மிகுந்த கோவம் அடைந்தார். இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி கார்த்திக் மேடவாக்கம் வெள்ளங்கல் சுடுகாடுபடியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவரை காரில் வழிமறித்துள்ளார். பின்னர் தான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் உன்னுடைய வீடியோ ஒன்று என்னிடம் உள்ளது, அதை நான் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அத்துடன், உன் குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி விடுவேன் என்றும் வராகி மிரட்டி உள்ளார். மேலும் 25 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் பார்லர்- மசாஜ் சென்டரை நீ மறுபடியும் நடத்த முடியும் என்றும் மிரட்டியதுடன் கொலை மிரட்டலும் எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பயந்து போன கார்த்திக் மேடவாக்கம் காவல் நிலையத்தில் வராகி குறித்து புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இந்தியன் மக்கள் மன்றம் என்ற பெயரில் ‘லெட்டர் பேட் கட்சி’யை நடத்தி வராகி என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு புழல் சிறையில் அடைத்தனர்.