கலாஷேத்ரா விவகாரம் புகாரளிக்க தனி இணையதளம்! நீதிபதி கண்ணன் அறிவிப்பு
மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாகக் கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், மாநில மனித உரிமை ஆணைய கண்காணிப்பாளர் மகேஷ்வரன் தலைமையிலான அதிகாரிகள் கலாஷேத்ராவில் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே பாலியல் தொல்லை புகாரில் கைதான கலாஷேத்ரா கல்லூரி நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் பாலியல் புகார் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க புதிய இணையதள முகவரி உருவாகப்பட்டுள்ளதாக இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி கண்ணன் அறிவித்துள்ளார்.
மாணவிகள் அளிக்கும் புகார்கள் தொடர்பான தகவல்கள் யாரிடமும் பகிரப்படாமல் ரகசியம் காக்கப்படும் என்றும், புகார் அளிப்பவர்கள் விவரங்கள் கலாஷேத்ரா நிர்வாகத்துடன் பகிர்ந்து கொள்ளப்படாது எனவும் நீதிபதி கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் புகாரை சென்னை தி நகரில் உள்ள தனது இல்லத்திலும் நேரில் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.